பெண்களுக்கான விடுதிகள் பதிவு செய்யாமல் நடத்துவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை
பெண்களுக்கான விடுதிகள் பதிவு செய்யாமல் நடத்துவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கான விடுதிகள் பதிவு செய்யாமல் நடத்துவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், 18-வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கான விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவைகளை தமிழ்நாடு மகளிர்- குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறை விதி 2014-ன் கீழ் விடுதிகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
எனவே விடுதியின் உள்ளுரைவோர் எண்ணிக்கை, கட்டிட பரப்பளவு விவரம், விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாப்பாளர் விபரம், வருகைப்பதிவேடு நகல், கண்காணிப்பு கேமரா பொருத்தியிருப்பின் அதன் விபரம், சேர்க்கைப்பதிவேடு விவரம், முதலுதவிப்பெட்டி பொருத்திய விவரம், உடல்நிலை சரியில்லாத பெண்கள் ஓய்வெடுக்க தனியறை விவரம், மேலாண்மை குழு அமைக்கப்பட்ட விவரம், விடுதி கட்டிடம் சான்று டி-லைசன்ஸ் நகல், பொதுப்பணித்துறையின் மூலம் பெற்ற கட்டிட உறுதிசான்று நகல்.
15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சுகாதாரத்துறையிடம் இருந்து பெற்ற சுகாதார சான்று நகல், உணவு பாதுகாத்தல் மற்றும் தரப்படுத்துதல் துறையினரிடமிருந்து பெற்ற தரச்சான்றிதழ் நகல் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் இருந்து பெற்ற தடையில்லா சான்று நகல் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டரின் பெயரில் ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன் இணையதள முகவரியில் வருகிற 15.5.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் நகல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான விடுதி தொடர்பான பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தினையும், 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கான விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதி தொடர்பான பதிவிற்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.
சட்டரீதியான நடவடிக்கை
ஆய்வின் போது பதிவு செய்யாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு விடுதிகள் ஒழுங்குமுறை விதி 2014-ன் படி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.