பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு-ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்


பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு-ஏமாற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள்
x

ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர்தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும். ‘அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு. சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

புதுக்கோட்டை

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வு ஊதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச் சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

சர்வர் பிரச்சினை

விராலிமலையை சேர்ந்த இல்லத்தரசி சத்யா:- தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் காத்திருந்து ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வேண்டிய நிலைதான் இன்றளவும் உள்ளது. முன்பெல்லாம் வங்கி மூலமாக அக்கிளையின் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பப்படும். இதனால் சிரமமின்றி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது சில ஏஜென்சிகள் மூலமாக ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படுவதால் எந்தெந்த ஏ.டி.எம்.களில் அதிக பரிமாற்றம் நடைபெறும் என்பது அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதுமட்டுமின்றி அனைத்து ஏ.டி.எம்.களிலும் குறிப்பிட்ட அளவு பணம் நிரப்ப வேண்டும் என்ற சூழலும் அவர்களுக்கு இருப்பதாலேயே தொடர் விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் பிரச்சினைகளை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் பே, பே.டி.எம். போன்றவை மூலம் பண பரிவர்த்தனை செய்வது சுலபமாக இருந்தாலும் சில நேரங்களில் சர்வர் மற்றும் நெட்வொர்க் பிரச்சினைகளால் பண பரிமாற்றத்தில் தொய்வு ஏற்படுகிறது. எனவே முன்பு இருந்ததை போலவே அந்தந்த வங்கி மூலமாகவே ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படும் பட்சத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம்

அன்னவாசலை சேர்ந்த மன்சூர்:- வாடிக்கையாளர்கள் சேவையை அதிகரிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கி வேலை நேரமான காலை 10 முதல் பகல் 4 மணிக்கு பிறகும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்க இது ஒரு நல்ல வழியாக இருந்தது. ஆனால் ஒரு சில ஏ.டி.எம்.களில் சரிவர பணம் நிரப்பப்படுவதில்லை. இதனால் பணம் எடுக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் செல்லும் அவலம் ஏற்படுகிறது.

ஏ.டி.எம். கார்டை மாற்றி மோசடி

பொன்னமராவதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தண்டபாணி:- 'ஜிபே', 'போன்பே' மூலம் பணம் கையாளும் முறைகள் இருந்தாலும், அவற்றை படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏ.டி.எம். பக்கம் போவதில்லை. மாறாக பெரும்பாலான பொதுமக்கள் ஏ.டி.எம்.களை நம்பித்தான் இருக்கிறார்கள். பொன்னமராவதியில் சமீபத்தில் 4 முறை பொதுமக்களை மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு மாற்று ஏ.டி.எம். கார்டு கொடுத்து ரூ.3 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து உள்ளனர். முன்பெல்லாம் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க சென்றால் பணம் இல்லையெனில் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் உடனடியாக வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை வைத்து விட்டு பொதுமக்களுக்கு உடனடியாக சேவை செய்தார்கள். ஆனால் தற்போது ஏஜென்சிகளிடம் இந்த பணியை ஒப்படைத்து உள்ளதால் அவர்கள் வெளியூர்களில் இருந்து வருவதற்கு தாமதம் ஆகிறது. இதனால் பண்டிகை காலங்களில் சரியான நேரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆள் பற்றாக்குறை

ஆவூர் வக்கீல் ராஜா:- ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி வங்கி நிறுவனங்கள் தங்களது ஏ.டி.எம்.களை அமைத்து பணம் வழங்கி வந்தாலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டத்தின் படி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகளுக்கு டெண்டர் விடப்பட்டு அவுட்சோர்சிங் முறையில் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை, பயிற்சி இல்லா பணியாளர்கள் காரணமாக கிராமப்புற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை தாமதப்படுத்தி விடுகின்றனர். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற இலக்கை அரசுகள் அடைந்தாலும், வங்கியின் சேவை முழுமையாக பொதுமக்களுக்கு இன்றளவும் சென்றடையவில்லை. விழாக்காலம், மழைக்காலம் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.களை சரியாக பராமரிக்காது ரிசர்வ் வங்கி வகுத்துள்ள ஒழுங்கு முறை நடவடிக்கையின் கீழ் சேவை தவறிய செயலாக குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது சேமிப்பு பணங்களை பெறமுடியாமல் தவிப்பது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அடிப்படை உரிமையை இழந்து விடுகின்றனர். எனவே கிராமப்புற ஏ.டி.எம்.களில் வாரக் கணக்கில் பணம் இல்லாநிலை மாறி வங்கிகள் மீதான தடையில்லா சேவையை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

212 வங்கி கிளைகள்

புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 212 வங்கி கிளைகள் உள்ளன. இதில் ஒரு வங்கி கிளைக்கு குறைந்தது ஒரு ஏ.டி.எம். மையம் காணப்படும். நகரப்பகுதியில் ஒரு வங்கியின் கிளைக்கு குறைந்தது 4 ஏ.டி.எம். மையங்கள் உண்டு. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதோடு, ஏ.டி.எம். மையங்களிலே பணம் செலுத்தக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்னணி வங்கிகள் அனைத்தும் இந்த வசதியை ஒவ்வொரு ஏ.டி.எம். மையத்திலும் ஏற்படுத்தி உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியும். தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் எடுப்பது அதிகமாக தான் உள்ளது. கிராமப்புறங்களில் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் இருப்பதை காணமுடியும். பெரும்பாலான வங்கிகள் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதை தனியார் ஏஜென்சி மூலம் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவு பணம் இருப்பு வைக்க வேண்டும் என்ற அளவீடு உள்ளது. அந்த அளவீடு குறைந்தால் உடனடியாக அந்த எந்திரத்தில் இருந்தே வங்கிக்கு மற்றும் பணம் வைக்கும் ஏஜென்சிக்கும் குறுந்தகவல் சென்றுவிடும். ஒவ்வொரு வங்கியிலும் ஏ.டி.எம். மையங்களுக்கு என தனியாக ஒரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கி அதில் மேலாளர், ஏஜென்சி நிறுவனத்தினர் உள்ளிட்டோர் செல்போன் எண்ணை உள்ளடக்கி அதில் தகவல் பரிமாறுவது உண்டு. பெரும்பாலும் பணம் காலியானால் உடனடியாக நிரப்பிவிடுவார்கள். தாமதம் என்பது ஏற்படுவதில்லை. இருப்பு தொகையை பொறுத்து பணம் நிரப்புவது வழக்கம்.

பணத்தட்டுப்பாடு குறைகிறது

புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன்:- வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்புவது, அதில் பணம் காலியானால் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒவ்வொரு வங்கியிலும் இதற்காக தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவர்கள் தான் ஏ.டி.எம். மைய பொறுப்பாளர்கள். ஏ.டி.எம். மையங்களை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துவதால் ஒரு சில இடங்களில் பணம் விரைவில் காலியாகி விடும். பணம் காலியானது தொடர்பாக ஏ.டி.எம்.மில் இருந்து வங்கிக்கும், தனியார் ஏஜென்சிக்கும் தகவல் சென்றுவிடும். அவர்கள் தங்களிடம் உள்ள இருப்பு பணத்தை பலத்த பாதுகாப்புடன் நிரப்புவார்கள். தற்போது பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் வசதிகளுடைய ஏ.டி.எம்.கள் அதிகளவில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏ.டி.எம்.மில் ஓரளவு பணத்தட்டுப்பாடு குறைகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏ.டி.எம். எந்திரம்

வங்கிகளில் காசாளர் செய்கின்ற பணியை ஏ.டி.எம். என்கிற தானியங்கி பணம் வழங்கும் கருவி செய்து வருகிறது.

ஏ.டி.எம். எந்திரத்தை முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் என்பவர்தான்.

இந்த எந்திரம் 1967-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் 1987-ம் ஆண்டு மும்பையில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை அறிமுகம் செய்தது.

வங்கிகளுக்கு அபராதம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:- ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் உள்ளதா? என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன? என்பது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமல் ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே அனைத்து வங்கிகளுக்கும் இதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story