காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- போலீசார் விசாரணை
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் சோதனை
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த காரை பள்ளப்பட்டி போலீசார் கண்காணித்தனர்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் காரின் உரிமையாளர் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கார் கதவை திறந்து சோதனையிட்டனர்.
அப்போது காருக்குள் 3 சாக்கு மூட்டைகள் இருப்பது தெரிந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட 72 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட கார் யாருடையது? காரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலையம் எதிரே காரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.