பிரபல காலணி விற்பனை நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு விதிப்பு


பிரபல காலணி விற்பனை நிறுவனத்திற்கு  ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு விதிப்பு
x
திருப்பூர்


திருப்பூரில் பெண்ணிடம் காகித பைக்கு ரூ.3 வசூலித்த பிரபல காலணி விற்பனை நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

முடிமாற்று அறுவை சிகிச்சை

திருப்பூரை சேர்ந்தவர் சவுந்தர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது தலைமுடியை மாற்று அறுவை சிகிச்சை செய்ய கோவையில் உள்ள ஹேர் அன்ட் ஸ்கின் பேக்டரி நிறுவனத்தில் ரூ.95 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்தினார். அந்த நிறுவனம் ஏற்கனவே கூறியபடி உரிய முறையில் முடி மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து சவுந்தர் கடந்த 2021-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணையின் போது எதிர் தரப்பினர் உரிய பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், சவுந்தருக்கு சிகிச்சை கட்டணம் ரூ.95 ஆயிரத்து 500-ஐ 12 சதவீத வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் மும்பையை சேர்ந்த நிறுவனமான ஸ்டார் யூனியன் டை இச்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்துக்கான ஆயுள் காப்பீடு எடுத்து அதற்கு பீரிமியத்தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் இறந்து விட்டார். அவருக்கு முழு இன்சூரன்சு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கவில்லை. கட்டிய பிரீமியத்தை மட்டும் திருப்பி தருவதாககூறினார்கள்.

இதுகுறித்து கவிதா மற்றும் அவருடைய மகள், மகன் ஆகியோர் திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் கவிதாவுக்கு முழு ஆயுள் காப்பீட்டுத்தொகையான ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்க நுகர்வோர் கோர்ட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

போன் பே செயலி

உடுமலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது உறவினருக்கு போன் பே செயலி மூலமாக ரூ.9,500 செலுத்தியுள்ளார். ஆனால் செந்தில்குமாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிந்து விட்டது. சம்பந்தப்பட்டவருக்கு பணம் சென்று சேரவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் கடந்த 2019-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணையில் எதிர் தரப்பினர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து ரூ.9,500-ஐ 12 சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை போன் பே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளை வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.3 காகித பைக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு

திருப்பூரை சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த 21-5-2019 அன்று திருப்பூரில் உள்ள பிரபல காலணி விற்பனை செய்யும் கடைக்கு சென்று ரூ.898 மற்றும் நிறுவனத்தின் பெயர் இடம்பெற்ற காகித பைக்கு ரூ.3 சேர்த்து வசூலித்தது. காகித பைக்கு ரூ.3 சேர்த்து வசூலித்தது குறித்து சரண்யா திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையில் உரிய பதில் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து பிரபல காலணி நிறுவனம், சரண்யாவுக்கு ரூ.3 திருப்பி வழங்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story