கிருஷ்ணகிரியில் ரூ.8 கோடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடம் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ரூ.8 கோடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
புதிய கட்டிடம்
கிருஷ்ணகிரியில் ரூ.8 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் பூமாலை வணிக வளாகம் புனரமைக்கப்பட்டது. இந்த கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிடம் மற்றும் பூமாலை வணிக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை பார்வையிட்டனர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
18 அங்காடிகள் ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட தரைதளத்தில் 15 அறைகளும், முதல் தளத்தில் 20 அறைகளும், 180 நபர்கள் அமரும் வகையில் கூட்டரங்கமும் அமைக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள 23 அங்காடிகளில் 18 அங்காடிகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை பொருட்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஜாகீர்உசேன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், ஒன்றியக்குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, அம்சா ராஜன், உஷாராணி குமரேசன், சசி வெங்கடசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் சிவக்குமார், வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.