ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டம்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
விடுப்பு எடுக்கும் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
இதே போல ராஜாக்கமங்கலம், கல்குளம், தோவாளை உள்ளிட்ட 9 ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
இதுபற்றி சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்களது வெகுநாள் கோரிக்கை தொடர்பாக இந்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நாளை (அதாவது இன்று) 2-வது நாளாக நடைபெறும். அதன்பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.