ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
x

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர்:

கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்த பட்ச காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் அரசு கருவூலம்மூலம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து ஊராட்சிகள் முன்பும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சங்க நிர்வாகிகள் 683 ஊராட்சிகளிலும் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கோண்டூர் ஊராட்சியில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருவேங்கடம் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க தலைவர் அய்யனார், பழனி, துப்புரவு பணியாளர் சங்க மாநில பொறுப்பாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் 683 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story