ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ஊராட்சிகளில் மேல்நிலை நீர் தொட்டிகளில் தானியங்கி ஸ்விட்ச் வைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் வேலையை பறித்திடும் தமிழக அரசின் உத்தரவை வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசின் அரசாணை எண் 152-ஐ திரும்ப பெற வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் மற்றும் நிலுவை தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் அனிபா, மாவட்ட பொருளாளர் மாலதி, மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் முரளி, மாவட்ட பொருளாளர் ரெகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் மேல்நிலை தொட்டிகளில் நீர் வீணாகாமல் இருக்கும் வகையில் தானியங்கி ஸ்விட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் வேலை இழப்பு ஏற்படாது. துப்புரவு பணியாளருக்கு சம்பள மற்றும் நிலுவை தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 2 மணி நேரம் நடந்தது.