மத்திய அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வழக்கமாக ஒதுக்கீடு செய்யும் நிதியிலிருந்து 33 சதவீத நிதி ஒதுக்கீட்டை குறைத்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்டத் தலைவர் சாமியப்பன், ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கணினி இயக்குனர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் சீர்காழி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டாரத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் வட்டார செயலாளர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், சுலோக்சனா, திருநாவுக்கரசு, கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட துணை தலைவர் அன்பரசன் நன்றி கூறினார்.