ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மீது துறைரீதியான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டத்தை சீரான இடைவெளியில் நடத்த வேண்டும். சம வேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டின்படி இளநிலை பொறியாளர்களுக்கும், உதவி பொறியாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ராமதாசு, மாவட்ட இணைச்செயலாளர் தவுலத்உசேன்கான் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.