ஊரக விளையாட்டு மைதானங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
ஊரக விளையாட்டு மைதானங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினமும் தங்கள் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்து குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும்.
இளைஞர்கள் நல்ல உடல் நலத்துடனும், ஒற்றுமை உணர்வுடனும் செயல்பட விளங்கும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஊரக விளையாட்டு மைதானங்களை அனைத்து ஊராட்சிகளிலும் முழுமையான பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும்.
உறுதி செய்ய வேண்டும்
ஊரக பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப சமையல் கூடங்கள் புதிதாக அமைத்துக்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு இருப்பதால் இந்த பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கோடைகாலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் பல்வந்த் வாகி, ஊராட்சி, உதவி இயக்குனர் தமிழரசி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர்கள் நாகராஜன், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.