காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து ரஷிய கப்பல் அதிகாரி பலி
காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கப்பலில் பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்ட போது, கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் ரஷிய கப்பல் அதிகாரி உடல் நசுங்கி பலியானார்.
கிரேன் கம்பி அறுந்தது
மீஞ்சூர் அடுத்த காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் காமராஜர் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்திற்கு ரஷிய நாட்டில் இருந்து 18 பேருடன் யு.எச்.எல். பார்ச்சுன் என்ற கப்பல் கடந்த 9-ந் தேதி வந்தது. பின்னர் துறைமுக பகுதியின் யார்டில் இருந்து கார்கோ பொருட்களை கப்பலில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.
கிரேன் மூலம் பொருட்களை கப்பலில் ஏற்றும் பணியில் தனியார் கப்பல் கம்பெனி ஊழியர் சீனிவாசன் (வயது 43) என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கப்பலில் மேல் தளத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருக்கும் போது திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது.
பலி
அப்போது ரஷிய கப்பலின் தலைமை அலுவலராக பணிபுரிந்த கான்ஸ்டான்டின் (46) மற்றும் ஊழியரான ரஷிய நாட்டைச் சேர்ந்த ரோமல்கேசஸ் (43) ஆகிய 2 பேர் மீதும் பொருட்கள் விழுந்தது. இதில் கான்ஸ்டான்டின் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரோமல்கேசஸ் துறைமுக ஆம்புலன்சு வாகனம் மூலம் மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பி கம்பி அறுந்து விழுந்த இடத்தில் பலியான கான்ஸ்டான்டின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.