மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் தஞ்சாவூர் பயிற்சி மையத்தால் மின்வாரிய ஊழியர்களுக்கு மின்பாதுகாப்பு பயிற்சி மன்னார்குடி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் கலந்துகொண்டு பயிற்சி அளித்து பேசுகையில், பணியின் போது மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து பணியாற்ற வேண்டும். கையுறை, இடுப்புக்கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின்பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும். இயற்கை இடர்பாட்டால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து செயல்படவேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும், மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் மற்றும் கேபிள் வயர்கள் கட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பிரிவுப்பொறியாளர்கள் கண்ணன், ராஜகோபால், சீனிவாச கார்த்திகேயன், பாலசுப்ரமணியன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.