சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
நாகையில் 2-வது நாளாக சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
நாகையில் 2-வது நாளாக சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
கடலோர பாதுகாப்பு ஒத்திகை
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடலோர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு போலீசார் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இதற்காக நாகை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் பகுதியிலும், கடற்கரையோர பகுதியிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்குமாறு கடலோர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
2-வது நாளாக...
அதேபோல பொதுமக்கள் கூடும் ஆன்மிக திருத்தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-ம் நாளாக சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
2 நாட்கள் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி சர்ச், நாகூர் பட்டினச்சேரி, புத்தூர் அண்ணா சிலை ஆகிய இடங்களில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் போல் நடித்த 25 பேரை போலீசார் பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.