கடலூர் துறைமுகம் பகுதிக்கு வந்த கடலோர காவல்படை பாய்மர படகு சாகச பயண குழுவினருக்கு வரவேற்பு
கடலூர் துறைமுகம் பகுதிக்கு வந்த கடலோர காவல்படை பாய்மர படகு சாகச பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேசுவரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையிலிருந்து ராமேசுவரம் வரை சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9-ம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதையொட்டி அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாய்மர படகு சாகச பயண குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் ராமேசுவரத்துக்கு புறப்பட்ட பாய்மர படகு சாகச குழுவினரின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்பட பலர் உடன் இருந்தனர்.
இவர்களின் கடல் பயணத்திற்கு துணையாக, 30 கடலோர காவல் படை போலீசார் தரை மார்க்கமாக வாகனங்களில் பயணம் மேற்கொள்வார்கள். பாய்மர சாகச பயணத்தின் போது ஏதேனும் இயற்கை சீற்றங்கள், பழுதுகளோ, உதவிகளோ, தேவைப்படும் பட்சத்தில், தரைமார்க்கமாக செல்லும் போலீசார் உடனடியாக செயல்பட்டு பாய்மரப் படகில் பயணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில், இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.