ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்...!


ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்...!
x

தமிழர்களின் வரலாற்று தொன்மையை விளக்குகின்ற ஆதிச்சநல்லூர் வரலாற்று அதிசயம் வரலாற்று என சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள் அமைப்பு தலைவரும் முன்னாள் கலெக்டருமான சகாயம் காண்பதற்காக வருகை தந்தார்.

அவர் ஆதிச்சநல்லூரில் பாண்டியராஜா கோவில் அருகே ஆற்றங்கரையில் நடைபெறும் அகழாய்வு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், அலெக்சாண்டர் ரியா கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 சென்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளையும், தங்கத்தால் ஆன நெற்றிபட்டையம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்கள், முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டு ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுகள் குறித்து ஆய்வு மாணவர்கள் குமரேசன், மணிகண்டன், வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாசன், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் மற்றும் வினித், சந்தன்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் சகாயம் ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழர்களின் வரலாற்று தொன்மையை விளக்குகின்ற ஆதிச்சநல்லூர் வரலாற்று அதிசயம் வரலாற்று ஆச்சரியம். 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததற்கான எச்சம் ஏராளமாக கிடைத்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், பல்வேறு வகையான உலோக கருவிகள் கிடைத்துள்ளன.

முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளாக பழங்கால பொருட்கள் அமைந்துள்ளன. இன்னும் ஆழமாக விரிவாக ஆய்வுகளை நடத்தப்பட வேண்டும். நாகரிக வரலாறு குறித்த கால நிர்ணயம் விரைவாக கண்டறியப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள அகழாய்வு பொருட்கள் மீண்டும் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமை வாய்ந்த மாபெரும் நாகரிகம் பிற நாகரிகத்தோடு தொடர்பில் இருந்தார்களா வணிகம் செய்தார்களா என்பதனையும் கண்டறிய வேண்டும்.

தமிழகம் இந்திய ஒன்றியத்தினுடைய இன்றியமையாத பகுதி. தமிழர்களின் பெருமை என்பது நாட்டிற்கான பெருமை. தமிழகம் பிற பகுதிகள் என்று பார்ப்பதற்கு எதுவும் இல்லை. ஒன்றிய அரசே தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story