ஈரோடு பூம்புகார் நகரில் மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


தினத்தந்தி 15 Oct 2022 2:26 AM IST (Updated: 15 Oct 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பூம்புகார் நகரில் மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோடு பூம்புகார் நகரில் மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் பி.பி.அக்ரஹாரம் அருகில் உள்ள பூம்புகார் நகரில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் செல்ல முடியாமல் நடைபாதையில் தேங்கி நின்றது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையில் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கனிராவுத்தர்குளம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, 'சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் நடைபாதையில் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்ய வேண்டும்' என்றனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே பெரும்பள்ளம் ஓடை கரையோர பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் அங்கு சேறும் சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமப்பட்டனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கிருஷ்ணம்பாளையம் வைராபாளையம் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற சிலர் அந்த குழிக்குள் தவறி விழ பார்த்தனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்தனர்.

மழைநீர்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வரட்டுப்பள்ளம் -107.20, பவானி -76, கொடிவேரி -52, குண்டேரி பள்ளம் -48.6, பவானிசாகர் -46.60, ஈரோடு -43, சத்தியமங்கலம் -40, அம்மாபேட்டை -39.60, மொடக்குறிச்சி -35, பெருந்துறை -32, சென்னிமலை -28, எலந்த குட்டைமேடு -26.60, நம்பியூர் -26, தாளவாடி -24, கவுந்தப்பாடி -21.20, கொடுமுடி -10.20, கோபி -7.50.


Next Story