மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து மறியல்


மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து மறியல்
x
திருப்பூர்


திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களை வெளிச்சந்தை முறையில் தனியார் துறைக்கு மாற்றும் அநீதிக்கு எதிராகவும், பனியன் உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாத்திடவும் வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே ரெயில் நிைலயம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

அப்போது 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதிப்பலன்களை உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

176 பேர் கைது

அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் ஆண்கள் 95 பேர், பெண்கள் 81 பேர் என மொத்தம் 176 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பாத்திர சங்க செயலாளர் செல்வராஜ், ஜெனரல் சங்க தலைவர் பழனிசாமி, பனியன் சங்க செயலாளர் செந்தில்குமார், தனியார் மோட்டார் சங்க தலைவர் சசிகுமார், செயலாளர் சுரேஷ், சுகாதார சங்க பொருளாளர் ஜெகநாதன், வடிவேல் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 667 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story