விடிய விடிய 500 டன் பூக்கள் விற்பனை
ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனையால் தோவாளை மார்க்கெட் விழாக்கோலம் கண்டது. மார்க்கெட்டில் 500 டன் பூக்கள் விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனையால் தோவாளை மார்க்கெட் விழாக்கோலம் கண்டது. மார்க்கெட்டில் 500 டன் பூக்கள் விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தோவாளை மார்க்கெட்
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவற்றை வாங்குவதற்காக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து பூக்களை வாங்கிச் செல்வார்கள். பூக்களின் விலையானது பண்டிகை மற்றும் விழா காலங்களில் உயர்ந்தும், மற்ற நாட்களில் குறைந்தும் காணப்படும். குறிப்பாக ஆயுதபூஜை மற்றும் ஓணம் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து இருக்கும்.
ஓணம் பண்டிகை
தற்போது, ேகரளாவில் ஓணம் பண்டிகை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே தோவாளை மார்க்கெட் களைகட்ட தொடங்கியது. ஓணம்பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது அத்தப்பூ கோலம் ஆகும்.
அதன்படி கேரளாவில் ஓணம் பண்டிகை ெதாடங்கியதில் இருந்து அனைத்து வீடுகளின் முன்பும் மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு வருகின்றனர். இந்த கோலத்திற்கு பல வண்ணங்களில் உள்ள பூக்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அதன்படி வாடாமல்லி, சிவப்பு கிரேந்தி, மஞ்சள் கிரேந்தி, வெள்ளை சிவந்தி, மஞ்சள் சிவந்தி, சிவப்பு ரோஜா, வெள்ளை ரோஜா, அரளி ஆகியவை பயன்படுத்துகின்றனர்.
500 டன் பூக்கள்
பொன் ஓணம் என்று சொல்லக்கூடிய ஓணப்பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராயகோட்டை, சேலம் பொம்முடி, ஓசூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து சுமார் 50 லாரிகளில் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஓணம் சிறப்பு விற்பனை நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய நடந்தது. இதன்காரணமாக அனைத்து பூக்களும் விற்று தீர்ந்தன. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 12 மணி வரையில் 500 டன் பூக்கள் விற்பனையானது.
4 ஆண்டுகளுக்கு பிறகு...
விற்பனை குறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
சிறப்பு விற்பனையையொட்டி கேரளாவில் இருந்து சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் அதிகளவில் வருகை தந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு பூக்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து இன்று (அதாவது நேற்று)காலையிலும் வியாபாரம் நடைபெற்றது.
4 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல வியாபாரம் நடந்தது. மேலும் வியாபாரிகளான நாங்கள் மட்டுமின்றி, பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை விவரம்
மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
பிச்சி ரூ.1,650, மல்லிகை ரூ.3,300, முல்லை ரூ.1,500, அரளி ரூ.270, சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.300, கோழி பூ ரூ.80, பச்சை ரூ.10, ரோஜா (100 எண்ணம்)ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.180, ஸ்டெம்புரோஸ் ரூ.280, மஞ்சள் கிரேந்தி ரூ.100, சிவப்பு கிரேந்தி ரூ.150, மஞ்சள் சிவந்தி ரூ.250, சிவந்தி வெள்ளை ரூ.350, கனகாம்பரம் ரூ.1,000, தாமரை ரூ.10, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.150, துளசி ரூ.30 என விற்பனையானது.