ரூ.3 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை
ஒட்டன்சத்திரம் அருகே ரூ.3 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்ற தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே தாத்தாகவுண்டனூரை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் அவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க சிரமம் அடைந்து வந்தனர். இதனால் அவர்கள் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்தி வேலூரை சேர்ந்த தமிழரசி ஆகியோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் குழந்தையை கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சத்திற்கு விற்றனர்.
இந்நிலையில் தாத்தாகவுண்டனூரை சேர்ந்த நர்சு ஒருவர் அந்த தம்பதியிடம் குழந்தை குறித்து கேட்டார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த நர்சு ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை விற்றதாக கோபி, மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குழந்தையும் மீட்கப்பட்டது.