குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை


குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

வாரச்சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

பொங்கல், ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் அதிக அளவில் விற்பனையாகும். குறிப்பாக மாட்டுப்பொங்கல் விழாவிற்கு அடுத்து நாள் காணும் பொங்கல் விழாவில் கிராமபுறங்களில் வசிக்கும் மக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதனால் இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

காணும் பொங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வாரச்சந்தைகளில் பொங்கலை ஒட்டி ஆடுகள், நாட்டுக்கோழிகள் விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதற்காக கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இந்தநிலையில் நேற்று குந்தாரப்பள்ளியில் வாரச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஆடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் விற்பனைக்கு விவசாயிகளும், வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்தனர். மேலும், ஆடுகள் வாங்கிச் செல்வதற்காக, வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஒரு ஆடு எடையை பொறுத்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகளை வியாபாரிகள் போட்டி, போட்டு கேட்டதால் விற்பனை படுஜோராக நடந்தது.

இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:-

ரூ.8 கோடிக்கு விற்பனை

வருகிற 17-ந் தேதி அன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதேபோல் கிராமங்களில் இஷ்டதெய்வங்களுக்கு ஆடுகளை வெட்டி, பங்கிட்டு பிரித்து கொள்வார்கள். நேற்று ஒரு நாள் மட்டும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. ஒரு ஜோடி ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.

மேலும், நாட்டுக்கோழிகளும் வழக்கத்தைவிட அதிகளவில் விற்பனையானது. ஆடு, கோழிகள் வளர்த்த விவசாயிகளுக்கு ஓரளவிற்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) போச்சம்பள்ளி சந்தையிலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story