நாமக்கல் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். எனவே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்னால் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதிகாலை முதல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், கரூர், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இந்த ஆடுகள் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதாகவும் வியாபாரிகள் கூறினர். வியாபாரிகள் குறைவான அளவே வந்ததால், விற்பனை குறைந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.