ரேஷன் கடைகளில் சுகாதார நாப்கின்கள் விற்பனை தொடக்கம்


ரேஷன் கடைகளில் சுகாதார நாப்கின்கள் விற்பனை தொடக்கம்
x

ரேஷன் கடைகளில் சுகாதார நாப்கின்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மேட்டுமகாதானபுரத்தில் நேற்று ரேஷன் கடைகளில் தோழி சுகாதார நாப்கின்கள் விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சுகாதார நாப்கின்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டவை ஆகும். இத்திட்டத்தின் நோக்கம் குறைவான விலையில் தரமான சுகாதார நாப்கின்கள் எளிதாகவும், பரவலாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்வது. பொது வினியோக கடைகள் பரவலாக அமைந்துள்ளதால் அவற்றின் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மாதவிடாய் குறித்த சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களை இது போக்கும். 6 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை காட்டிலும் இது 25 சதவீதம் குறைவாகும். முதல் கட்டமாக இத்திட்டம் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 21 ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது.

நுகர்வோரிடம் நாப்கின்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்த கருத்துக்கள் படிவத்தில் பெறப்பட்டு அதன் மூலம் நாப்கின்களின் தரம் மேம்படுத்தப்படும். படிப்படியாக இத்திட்டம் கரூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story