விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டேவிட் டென்னிசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் நடப்பு நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ள தங்க சம்பா, கருங்குறுவை, ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற நெல் ரக விதைகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த விதைகளின் விலையானது ரூ.25 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 மானிய விலையில் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ விதைகள் மட்டும் வழங்கப்படும்.
எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மைவிரிவாக்க மையங்களை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.