சேலம் கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். அப்போது, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 323 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய தீர்வு காணுமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தரைத்தளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் கோரிக்கை மனுக்களை நேரில் சென்று பெற்றுக்கொண்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 12 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் மயில், கலால் துறை உதவி ஆணையர் மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---