சேலம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாமாண்டு மாணவர்கள்
சேலம் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 5 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரியில் 2022-2023-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதன்படி பள்ளி பருவம் முடிந்து முதன் முதலாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். முன்னதாக கல்லூரி நுழைவு வாயிலில் வாழை தோரணங்கள் கட்டியும், மாணவர்களை வரவேற்று விளம்பர தட்டியும் வைக்கப்பட்டிருந்தது.
இனிப்பு வழங்கி வரவேற்பு
அப்போது, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமையில் பேராசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. ஆகிய இளநிலை படிப்புகளில் 20 பாடப்பிரிவுகளில் 1,460 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.
அப்போது, மாணவ, மாணவிகள் மத்தியில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் பேசும்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவ, மாணவிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ராக்கிங் போன்ற செயலில் ஈடுபடக்கூடாது. கல்லூரிக்கு வரும்போது அடையாள அட்டை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். அனைவரும் நன்றாக படித்து கல்லூரிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.