சேலம் மாநகராட்சி 19-வது வார்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


சேலம் மாநகராட்சி 19-வது வார்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

சேலம் 19-வது வார்டில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், எனவே, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

சேலம்

அரசு அலுவலகங்கள்

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 11 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்த வார்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தேன்மொழி அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் அவர், தி.மு.க.வில் சேர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வியாபாரிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், போலீஸ்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர். இந்த வார்டில் ஒரு மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் 2 தனியார் பள்ளிகள் உள்ளன. இதுதவிர, சேலம் மேற்கு தாலுகா அலுவலகம், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலகம், சேலம் உதவி கலெக்டர் அலுவலகம், மேற்கு சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் சூரமங்கலம்-சின்ன அம்மாபாளையம் செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

தெரு நாய்கள் தொல்லை

19-வது வார்டை பொறுத்தவரையில் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதவிர, தெருக்களில் குப்பைகளை சரிவர அப்புறப்படுத்தாமல் இருப்பதால் கொசுக்கள் தொல்லையால் நோய் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் தொல்லையால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் வார்டு மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து 19-வது வார்டு பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

ஜாகீர் சின்னஅம்மாபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ்:-

எங்கள் பகுதியில் ஒரு சுகாதார வளாகம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட 2 சுகாதார வளாகங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், அங்கன்வாடி மையங்கள் முன்பு திறந்த வெளியில் கிணறு உள்ளது. இதனால் குழந்தைகள் தவறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, அந்த கிணற்றை சீரமைத்து இரும்பு கம்பிகளால் மூட வேண்டும். பழுதடைந்துள்ள பல்நோக்கு சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும். ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு உள்ள ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகளை இங்குள்ள அங்கன்வாடி மையம் முன்பு கொண்டு வந்து தான் கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிப்பதோடு, திறந்த வெளி கிணற்றை மூட வேண்டும்.

பசுமை வெளிப்பூங்கா

தர்மர் நகரை சேர்ந்த விஜயகுமார்:-

கடந்த 2018-ம் ஆண்டு தர்மநகரில் பசுமை வெளிப்பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பூங்கா சீரமைக்காமல் பழுதடைந்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் வருவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் உள்ளே சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

மேலும், பூங்கா அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிப்பிடம் வசதி இல்லை. இதனால் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே, குழந்தைகள் நல மையத்துக்கு கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சாக்கடை கால்வாய் சீரமைப்பு

ஜலால் தெருவை சேர்ந்த அமுதா:-

தர்மர் நகர் முதல் குறுக்கு தெரு, ஜலால் தெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லையால் அவதிபட்டு வருகிறோம். சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் வயதானவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மழை பெய்தால் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.

எனவே, இங்குள்ள சாக்கடை கால்வாய்களை இடித்துவிட்டு புதியதாக கட்டிக்கொடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. அவற்றை செய்து கொடுக்க வேண்டும்.

மீன் மார்க்கெட் கழிவுநீர்

முன்னாள் கவுன்சிலர் ஆதம் ஷெரீப்:-

சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காந்தி ஆசிரமம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கலக்கிறது. குறிப்பாக சூரமங்கலம் மெயின் ரோட்டில் குழாயில் குடிநீர் பிடிக்கும் 2 பகுதிகளில் மீன் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மீன் மார்க்கெட்டிற்குள் கழிவுநீரை தேக்கி வைக்க வேண்டும். மீன் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை. எந்த வீதியில் பார்த்தாலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

* சாக்கடை கால்வாய் வசதி

* திறந்தவெளி கிணற்றை மூட வேண்டும்

* பழுதடைந்த சுகாதார வளாகம் சீரமைப்பு

* அங்கன்வாடி மையத்துக்கு கழிப்பிட வசதி

* பசுமை வெளிப்பூங்கா சீரமைப்பு

* சீரான முறையில் குடிநீர் வினியோகம்

* பல்நோக்கு சமுதாய கூடம் சீரமைப்பு

என்ன சொல்கிறார் கவுன்சிலர்

19-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் எஸ்.தேன்மொழி கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக இந்த வார்டில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. நான் கவுன்சிலராக பொறுப்பேற்று கடந்த 10 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சின்னஅம்மாபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள 5 தெருக்களில் ரூ.50 லட்சத்தில் சாக்கடை கால்வாய் மற்றும் தரைப்பாலம் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பாவாயம்மாள் தெரு, பொன்நகர், நக்கீரர் தெரு பகுதிகளில் ரூ.45 லட்சத்தில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டு அவற்றை செய்து கொடுத்து வருகிறேன். தனியார் கியாஸ் குழாய்கள் பதிப்பதால் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. அதை சரி செய்து தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். அண்ணாநகரில் உள்ள மாட்டு இறைச்சி கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இதுபற்றி மேயரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி மையம் முன்பு குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story