கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன்


கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன்
x

காளாம்பட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கலெக்டர் பரிசு வழங்கினார்.

வேலூர்

லத்தேரியை அடுத்த காளாம்பட்டில் உள்ள வேலூர் கிரிக்கெட் மைதானத்தில் (டர்ப்) 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அகாடமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதில், வேலூர் கிரிக்கெட் அகாடமி அணி, திருவண்ணாமலை, சென்னை, சேலம், ஓசூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 30 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. அதிக போட்டியில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த சென்னை-சேலம் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 22.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின்னர் 61 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சேலம் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. வேலூர் கிரிக்கெட் மைதான உரிமையாளர் வக்கீல் சுதாகர் அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். விழாவிற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் அணிக்கு வெற்றிக்கோப்பை, பரிசு மற்றும் 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் செய்த வீரர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story