தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு-முதல்-அமைச்சர் இன்று விருது வழங்குகிறார்
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருதை முதல்-அமைச்சர் இன்று வழங்குகிறார்.
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ரூ.92 கோடியில் பழைய பஸ் நிலையம் இடித்துவிட்டு ஈரடுக்கு பஸ் நிலையம், மல்டி லெவல் கார் பார்க்கிங், பள்ளப்பட்டி, குமரகிரி ஏரிகள் சீரமைப்பு பணிகள், எருமாபாளையம் குப்பை மேட்டில் பூங்கா அமைப்பு உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
மாநகரில் 141 வாகனங்கள் மூலம் வீடு தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பணிகளில் சிறப்பிடம் மற்றும் அடுத்த கட்ட மேம்பாட்டுக்கான நகர்வுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று (திங்கட்கிழமை) சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சிறந்த மாநகராட்சிக்கான விருதும், ரூ.25 லட்சமும் பெறுகிறார்.