7 லட்சம் ரூபாய் கடன் வாங்குவதற்கு ரூ.11 லட்சத்தை இழந்த சேலம் தொழிலாளி-வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி ஏமாந்தார்


7 லட்சம் ரூபாய் கடன் வாங்குவதற்கு ரூ.11 லட்சத்தை இழந்த சேலம் தொழிலாளி-வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி ஏமாந்தார்
x

சேலத்தில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்குவதற்கு ரூ.11 லட்சத்தை தொழிலாளி இழந்தார். வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி ஏமாந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்

கூலித்தொழிலாளி

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்சார் பாட்ஷா (வயது 36), கூலித்தொழிலாளி. அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த மாதம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் பேசிய மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அந்த நபரிடம் அன்சார் பாட்ஷா ரூ.7 லட்சம் வரை கடன் கேட்டார். அந்த நபர் ரூ.10 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி தருவதாகவும், இதற்காக சர்வீஸ் சார்ஜ் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் அனுப்புமாறு தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய அவர் பல்வேறு தவணையாக ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சம் செலுத்தினார்.

போலீசார் விசாரணை

அதன்பிறகு அந்த மர்ம நபர் அன்சார் பாட்சாவுக்கு கடன் ஏதும் வாங்கி கொடுக்க வில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்சார் பாட்ஷா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.7 லட்சம் கடன் வாங்குவதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்தை தொழிலாளி இழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story