சேலத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம்-போலீஸ் கமிஷனர் ஆய்வு
சேலத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் 14 புதிய நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந் தேதி பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அதன்படி சேலம் மாநகர காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட புதிய நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த வாகனத்தை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஒப்படைத்தார்.
இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தில் ஆய்வு செய்வதற்கான அனைத்து கருவிகளும், ஆய்வு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்றம் நடந்த இடத்திலேயே குற்ற புலனாய்வாளர்களுக்கு அறிவியல் சார்ந்த சேவைகளை வழங்கிடவும், தொடக்க கட்ட ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளன. ரத்தக்கறை, வெடிபொருள், போதை பொருள், துப்பாக்கிச்சூட்டின் படிமங்கள் ஆகியவைகளை குற்ற நிகழ்விடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாளுவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடயப்பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்குரிய உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன், தடய அறிவியல் ஆய்வக அறிவியல் அலுவலர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.