பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்தது. இதை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்தது. இதை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை
ஆயுத பூஜை பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக இருந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூசணிக்காய், பொரி, பழங்கள், பூக்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர். மேலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் விற்பனையும் ஜோராக இருந்தது. கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை, சென்னை சாலை, 5 ரோடு ரவுண்டானா, சப்-ஜெயில் சாலை, சேலம் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராயக்கோட்டை
தசரா மற்றும் ஆயூத பூஜை முன்னிட்டு ராயக்கோட்டை பூ மார்கெட்டில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து வருகிறது இந்த மார்கெட்டுக்கு கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, காடு செட்டிப்பட்டி, ஓடையாண்டஅள்ளி, எச்சம்பட்டி, கொப்ப கரை, சஜ்ஜலப்பட்டி, பால்னாம்பட்டி, பிள்ளாரிஅக்ரகாரம் உட்பட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து மார்கெட்டுக்கு விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
இந்த மார்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. பூக்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வியபாரிகள் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் ராயக்கோட்டை பூ மார்க்கெட்டில் ரூ.4 கோடிக்கு பூக்கள் விற்பனையானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஓசூர்
ஆயுத பூஜையையொட்டி, ஓசூரில் பூஜை பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர். ஓசூர் எம்.ஜி. ரோடு, பாகலூர் ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்கள், பழங்கள் தேங்காய், பூசணிக்காய், வாழைக்கன்று, மாவிலை, அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மேலும் இனிப்பு வகைகள், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
இதேபோல் ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் சாமந்தி, ரோஜா, மல்லிகை பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனால் பூ வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பூஜைகள் நடத்தி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.