தூத்துக்குடியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்


தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. இப்பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் மார்க்கெட்டில் கடும் நெரிசல் காணப்பட்டது.

ஆயுதபூஜை

நவராத்திரி விழாவின் கடைசி நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜையின்போது கொண்டைக்கடலை, அவல் பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி பூஜை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நேற்று மார்க்கெட்டுக்கு வந்தனர். கடைகளில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் குவித்துவைக்கப்பட்டு இருந்தன.

மேலும், தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாழைக்கன்றுகள் விற்பனைக்காக மார்க்கெட் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.20 முதல் விற்பனை செய்யப்பட்டன.

பூமார்க்கெட்டு

மேலும் பூமார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மல்லிகைப்பூ ரூ.1300-க்கும், பிச்சிப்பூ ரூ.1250-க்கும், கேந்தி ரூ.100-க்கும், கோழி கொண்டை ரூ.50, பச்சை ரூ.50, ரோஜா ரூ.300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று சிறிய பாக்கெட்டுகளாக அவல், சோளப்பொரி, அரிசிப்பெரி உள்ளிட்டவையும் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பாக்கெட்டும் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டன. அதே போன்று மாவிலை, பனைஓலை தோரணங்களும் விற்பனை செய்யப்பட்டன.

தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story