சேலத்தில் வண்ண கோலப்பொடிகள் விற்பனை மும்முரம்
சேலத்தில் வண்ண கோலப்பொடிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
அன்னதானப்பட்டி,
கோலப்பொடி
மார்கழி மாதம், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரை பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் வண்ண, வண்ண கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம். இதற்காக பல்வேறு வண்ண கோலப்பொடிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.
சேலம் நெத்திமேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கோலப்பொடிகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சேலம் மாநகரில் உள்ள வியாபாரிகள் அங்கிருந்து கோலமாவுகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
கடைகள்
சேலம் குகை, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட வண்ண கோலப்பொடிகள் விற்கும் கடைகள் உள்ளன. இது குறித்து கடைக்காரர்கள் கூறுகையில், வண்ண கோலப்பொடிகள் அளவைப் பொறுத்து ஒரு பாக்கெட் ரூ.3, ரூ.5, ரூ.7, ரூ.10 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளை கோலமாவு ஒரு பாக்கெட் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை சீசன் சமயம் என்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் கோலப்பொடிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என்றனர்.
இதேபோல் பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதனால் சுண்ணாம்பு, பெயிண்டு உள்ளிட்டவற்றின் விற்பனையும் கடைகளில் அதிகரித்து வருகிறது.