பொங்கல் பொருட்கள் விற்பனை களைக்கட்டியது
தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைக்கட்டியது.
தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைக்கட்டியது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் குலை, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மக்கள் சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை தொடர்பான பொருட்கள் விற்பனை களைக்கட்டி உள்ளது.
கரும்பு
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தேனி, கம்பம், மதுரை மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கரும்புகள் விற்பனைக்காக தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. நேற்று 15 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொங்கல் படி கொடுப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோன்று பொங்கல் வைப்பதற்கான மண்பானைகளும் நகரில் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பானை ரூ.150-க்கும், அடுப்பு ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அதே போன்று மஞ்சள் குலை ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டன. 25 கிழங்குகள் அடங்கிய ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.125 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
வாழைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விளைச்சல் குறைந்து இருப்பதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான வாழைத்தார்களே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்திருந்தன. பெரும்பாலும் சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.
தூத்துக்குடி மார்க்கெட்டில் கதலி ரூ.450, கோழிக்கோடு ரூ.600, சக்கை ரூ.400, கற்பூரவள்ளி ரூ.650, செவ்வாழை ரூ.850 முதல் ரூ.900 வரையும், நாடு ரூ.600-க்கும், பச்சை வாழை ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதும் மக்கள் வாழைத்தார்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
காய்கறிகள்
அதேபோல் பொங்கல் பண்டிகை அன்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். இதனால் மக்கள் காய்கறிகளையும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைக்கட்டி உள்ளது.