புத்தாண்டையொட்டிரூ.7¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனைகடந்த ஆண்டை விட அதிகம்
கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.7¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.
கடலூர் முதுநகர்
ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மது வகைகளை வாங்கி, மதுஅருந்தியும் கொண்டாடினார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக இருந்தது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 147 டாஸ்மாக் கடைகளில் கடந்த 30-ந்தேதி மற்றும் நேற்று முன்தினமும் அதிகளவில் விற்பனை நடந்தது. அந்த வகையில், 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் 2 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரத்து 900 ரூபாய்க்கு மது விற்பனையாது. அதேபோன்று புத்தாண்டுக்கு முந்திய நாளான நேற்று 4 கோடியே 45 லட்சத்து, 56 ஆயிரத்து, 600 ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில், மொத்தம் ரூ.7 கோடியே 41 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
சராசரி விற்பனை ரூ.2½ கோடி
இதே நாட்களில் கடந்த ஆண்டு 6 கோடியே 68 லட்சத்து 47 ஆயிரத்து 305 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது. ஆனால் தற்போது, 72 லட்சத்து 70 ஆயிரத்து 195 ரூபாய் கூடுதலாக விற்பனையாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு மாவட்டத்தில் 2½ கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.