குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு கலெக்டர் தகவல்


குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு கலெக்டர் தகவல்
x

தீபாவளி பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தீபாவளி பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

தீபாவளி தள்ளுபடி விற்பனை

குமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ-ஆப்டெக்ஸ் அங்காடியில் நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் முதல் விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ரூ.6 கோடி இலக்கு

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம், கன்னியாகுமரி விற்பனை நிலையம், வளாக விற்பனைக்குழு என 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள 5 விற்பனை நிலையங்களிலும் ரூ.2.83 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலக முதன்மை பொதுமேலாளர் அலோக் பாப்லே, திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ், மாநகராட்சி கவுன்சிலர் கவுசிகா, அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story