உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் தீவிரம்
வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன.
வேதாரண்யம்:-
வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன.
9 ஆயிரம் ஏக்கர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பருவம் தவறி மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது
இலக்கை எட்ட...
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். மே மாதத்தில் உற்பத்தி இலக்காக 6 ஆயிரம் டன் எட்டப்படும். ஆனால் மழை பாதிப்பால் இந்த ஆண்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தை கடந்தும் இதுவரை இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.