கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் கலக்கும் உப்புநீர்
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் உப்புநீர் கலப்பதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் உரிய இடத்தில் கதவணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் உப்புநீர் கலப்பதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் உரிய இடத்தில் கதவணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தையொட்டி வங்கக்கடலில் கொள்ளிடம் ஆறு சங்கமித்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் நல்ல நீர் சென்று கொண்டிருக்கும்போது கடல் நீர் ஆற்றுக்குள் புகுவது தடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மழை பெய்வது குறைந்து வறட்சி காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வருவது குறைந்து போனதால் கடல் நீர் உள்ளே புக தொடங்கியது.
நிலத்தடி நீர்
துறைமுகத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு உப்பு நீர் உள்ளே புகுந்தது. இதனால் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாற தொடங்கியது.
ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ளவர்கள் நிலத்தடி நீரை கைப்பம்பு மூலமும் சிறு மின் மோட்டார் மூலமும் எடுத்து அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் உரிய இடங்களில் தொடர்ந்து நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி கிராமங்களுக்கு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
உப்புநீர்
ஆற்றங்கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் ஒரு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த தோட்ட பயிர் சாகுபடி விவசாய சங்க தலைவர் ரவிசுந்தரம் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில தினங்களாக உப்பு நீா் உள்ளே புக தொடங்கி உள்ளதால் கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றில் 7 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உப்பு நீர் அடித்துச் செல்லப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. ஆற்றங்கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் நல்ல நீராக மாறியது. ஆனால் படிப்படியாக கொள்ளிடம் ஆற்றில் நல்ல நீர் செல்வது நின்று விட்டது.
கதவணை கட்ட வேண்டும்
கடந்த 10 நாட்களாக கொள்ளிடம் ஆற்றுக்குள் தொடர்ந்து உப்பு நீர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே புகுந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கரையோர கிராமங்களில் தோட்ட பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதால் தோட்ட பயிர் சாகுபடியை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்படுவதை நினைத்து அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே கொள்ளிடம் ஆற்றில் உரிய இடத்தில் கதவனை கட்டி உப்பு நீர் உள்ளே புகுவதை தடுக்க வேண்டும். அரசின் சார்பில் உரிய இடங்களில் கதவணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்காலிகமாக கடல் நீர் உள்ளே புகுவதை தடுக்கும் வகையில் கொள்ளிடம் அருகே உரிய இடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டவும், பின்னர் நிரந்தரமாக கதவனை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.