சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
பாசன வாய்க்காலில் வந்த கூடுதல் தண்ணீரால் கொள்ளிடம் பகுதியில் 600 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. மேலும், அங்குள்ள விளைநிலங்களும் நீரில் மூழ்கின. தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது.
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
இதனால், விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தெற்குராஜன் பாசன ஆற்றின் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து மகேந்திரப்பள்ளி மற்றும் காட்டூர், அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கவும், வடிகால்களை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்