சம்பா சாகுபடி பணிகள் மும்முரம்


சம்பா சாகுபடி பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை

டெல்டா மாவட்ட விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது.கல்லணையில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

நெற்பயிர்கள் கருகின

கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதாலும், போதிய மழை இல்லாமல் போனதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும் சில இடங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்தன.இருந்த போதிலும் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் மற்றும் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சியும், குறுவை நெற்பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

குறுவை சாகுபடி மும்முரம்

இந்த நிலையில், கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில், கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி பணியில் ஈடுபடாத விவசாயிகள், சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உழவு பணி

முதற்கட்டமாக வயல்களில் தண்ணீரை தேங்கி ஈரப்பதமாக வைத்திருந்தனர். இதை தொடர்ந்து வயல்களில் டிராக்டர் மற்றும் எந்திரங்கள் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தீவிரமாக உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story