சம்பா தொகுப்பு திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்
சம்பா தொகுப்பு திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வெளிப்பாளையம்:
சம்பா தொகுப்பு திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்ச்செல்வன்:- நாகை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கதிர் அடிப்பதற்கும், காய வைப்பதற்கும் களம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது அறுவடை பணிகள் எந்திரம் மூலம் நடைபெறுவதால் பெரும்பாலான களங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் சாலைகளில் நெல்களை காயவைத்து வருகின்றனர். எனவே அனைத்து கிராமங்களிலும் அரசு புறம்போக்கு களத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
முஜிபுஷரிக்:- மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு புதுப்பள்ளி முதல் வெள்ளப்பள்ளம் வரை நாகை -வேதாரண்யம் நெடுஞ்சாலையில் உள்ள வடிகால்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். .
பிரபாகரன்:-சம்பா சாகுபடிக்காக வெளிச்சந்தையில் வாங்கும் விதை நெல்லுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். சம்பா தொகுப்புத்திட்டம் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்.
கமல்ராம்:- 2021 -2022-ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும். தலைஞாயிறு அருகே ஆலடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நேரடி நெல் விதைப்பு
மணியன்:- வேதாரண்யம் ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் நேரடி நெல் விதைப்பு பணி நடைபெற உள்ளதால் ஆடுதுறை 51 நெல் விதை வேதாரண்யம் விரிவாக்க மையத்திற்கு மட்டும் இதுவரை வரவில்லை. விதை கிடைக்காத காரணத்தால் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு உடனடியாக விதை நெல் மற்றும் டி.ஏ.பி., யூரியா, அடியுரம் உள்ளிட்டவைகள் அனுப்ப வேண்டும்
இடுபொருட்கள்
சரபோஜி: இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை வழங்க வேண்டும்.
சம்பந்தம்: திருத்தப்பட்ட மின்சார மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என்ற தீர்மானத்தை அனைத்து விவசாயிகள் சார்பில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.