எந்திரம் மூலம் சம்பா நடவு பணிகள் தொடக்கம்


எந்திரம் மூலம் சம்பா நடவு பணிகள் தொடக்கம்
x

கும்பகோணத்தில் எந்திரம் மூலம் சம்பா நடவு பணிகள் தொடங்கி உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் எந்திரம் மூலம் சம்பா நடவு பணிகள் தொடங்கி உள்ளது.

சம்பா சாகுபடி

கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் ஆறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. மழையை நம்பி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சம்பாவிற்கான சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர். போதிய தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடி விவசாயிகள் தங்கள் சாகுபடி பணியை தாமதமாக தொடங்கினர்.

நாற்று நடும் பணிகள்

சம்பா சாகுபடியை பொறுத்தவரையில் விவசாயிகள் நீண்ட 180 நாட்கள் நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதன்பின்னர் பாய்நாற்றங்கால் தயாரித்தனர்.தற்போது நாற்றங்கால் வளர்ந்து நடுவுக்கு தயாராகி விட்டதால் சம்பா நாற்று நடும் பணிகள் பெரும்பாலான இடங்களில் நடந்து வருகின்றன. குறிப்பாக கும்பகோணத்தை அடுத்த புத்தூர் மேலநரிக்குடி பகுதியில் எந்திரம் மூலம் நடுவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாற்றுகள் பறிக்கும் பணி, நடவுப்பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.எந்திரம் மூலம் நடுவதால் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த வயல்களுக்கு சென்று விடுகின்றனர்.

எந்திரத்துக்கு வாடகை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவதுமேட்டூரில் வழக்கம் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் தேவையான இடங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பம்பு செட் மூலம் விவசாயிகள் சாகுபடியை தொடங்கிவிட்டோம். 1009 என்ற ரகத்தை சாகுபடிக்கு தயார் செய்துள்ளோம். எந்திரத்திற்கான வாடகை உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.2,500-க்கு இருந்த வாடகை இந்த ஆண்டு டீசல் விலை உயர்வால் ரூ.300-வரை உயர்ந்துவிட்டது.

ஆற்று நீர்

சொந்தமாக எந்திரம் வைத்திருப்பவர்கள் ஆட்கள் கூலி மட்டும் கொடுக்கின்றனர். ஆனால் வாடகைக்கு எடுப்பவர்கள் ஆட்கள் கூலி, வாடகை என கடந்த ஆண்டைகாட்டிலும் இந்த ஆண்டு செலவு கூடிவிட்டது. சொந்தமாக பாய் நாற்றங்கள் தயாரித்து நடுகிறோம் எங்களுக்கு நடுவு முடிந்த பின்னர் வரும் மீதி நாற்றங்காலை ஒரு ரேக் (வரிசை) ரூ.35-க்கு விற்பனை செய்து விடுவோம். ஆற்று நீரை எதிர்பார்த்தோம். ஆனால் ஆற்று நீர் சாியாக கிடைக்க வில்லை. பம்பு செட் மூலம் சாகுபடி தொடங்கி மழையை நம்பி நடவு பணியை தொடங்கி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story