சம்பா நெல் சாகுபடி பணி தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 73 ஆயிரம் எக்டேர் நடவு செய்யப்பட்டுள்ளது.
நாற்று நடவு
புதுக்கோட்டை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் பருவ மழை காலங்களில் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் நெல், வாழை சாகுபடி தவிர தோட்டக்கலை பயிர்களும், சிறு தானியங்களும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிற நிலையில் வயல்களில் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆங்காங்கே நாற்று நடவு பணிகளில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நாற்றுகளை நட்டு வருகின்றனர். இவ்வாறு நடவு செய்யும் போது தங்களுக்கென உள்ள நாட்டுப்புற பாடல்களை பாடியபடி வயல்களில் நடவு பணியில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது. புதுக்கோட்டை அருகே கட்டியாவயல், செல்லுக்குடி பகுதியில் நடவு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
73 ஆயிரம் எக்டேர்
இது குறித்து வேளாண்மை துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறுகையில், ''மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி இதுவரை 73 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவு பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை பரவலாக இருப்பதால் மேலும் நடவு அதிகரிக்கும்.
மொத்தம் 90 ஆயிரம் எக்டேர் வரை சம்பா நெல் சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். விவசாயத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வட்டார வேளாண் மையங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.