அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:30 AM IST (Updated: 15 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

தேனி

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது. 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள்.

அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப் பாதையை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள். உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப் பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

புதிய தரவுகள் இடம்பெற வேண்டும்

சித்ரா (கல்லூரி முதல்வர், தேனி) :- பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் என்பதை வரவேற்கலாம். ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள் குடும்ப சூழல் மற்றும் இதர காரணங்களுக்காக வேறு பகுதிகளுக்கு இடம்பெயரும் போது, வேறு கல்லூரிகளில் படிப்பை தொடர நேரிடும். அப்போது ஒரே பாடத்திட்டம் இருந்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள வெவ்வேறு பாடத்திட்டங்களில் இதுபோன்ற சூழலில் கல்வி பாதிக்கப்படும். அதே நேரத்தில் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் போது தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தரவுகள் இடம்பெற வேண்டும். கல்வித் தரத்தில் சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திலான பாடங்களை மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கும். சில பல்கலைக்கழகங்கள் இன்றும் பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றும். இதுபோன்ற சூழலில், ஒரே பாடத்திட்டம் என்பது ஏற்கனவே முதல் தரத்தில் இருக்கும் பாடத்திட்டத்தின் தரத்தை மேலும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு தற்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வந்து விட்டது. வணிகவியல் பாடப்பிரிவில் இன்னும் சில பாடத்திட்டத்தில் வாட் வரி தான் கற்பிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களை புகுத்த வேண்டும்.

ஒரே மாதிரியான கட்டமைப்பு

சரண்யா (பேராசிரியை, தேனி) :- தற்போது அமலில் உள்ள 'நான் முதல்வன்' திட்டம் அற்புதமானது. மாணவர்களுக்கு அது சிறந்த வழிகாட்டுதல்களை கொடுக்கிறது. அதே நேரத்தில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது. தஞ்சை போன்ற பகுதிகளில் பாடத்திட்டங்களில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். மதுரை போன்ற பகுதிகளில் உயிரியல் பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். இப்படி அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் உள்ளது. இது தேவையானதும் கூட. ஆனால், ஒரே பாடத்திட்டம் என்று வரும் போது, அந்தந்த பகுதிகளுக்கான கல்வித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வி எழுகிறது. மொழிப்பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்று வரும் போது அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கட்டமைப்பு வசதிகள் கிடைக்குமா? என்பதும் சிந்திக்க வேண்டும். ஒரே பாடத்திட்டம் என்று வந்து விட்டால் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு வரும். அது மாணவ, மாணவிகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மலர்விழி (பேராசிரியை, தேனி) :- தற்போது கல்வித்தரத்தில் பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகள் அளவிலும் வேறுபாடுகள் உள்ளன. மென்பொருள் பயன்பாட்டில் கூட இன்னும் சில பல்கலைக்கழகங்கள் முன்னோடியாகவும், சில பின்தங்கியும் உள்ளன. ஒரே மாதிரியான பாடத்திட்டத்தால் அதை சரி செய்து கொள்ள முடியுமா? ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான் தெரிய வரும். எந்த ஒரு சீரமைப்பாக இருந்தாலும் தொலைநோக்கு திட்டத்தோடு இருக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் திறன், வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல், எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கற்பித்தல் போன்றவை முக்கியமானது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், உயர் தரத்திலும் பாடத்திட்டம் அமைய வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து உயர்கல்விக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வுகள் இருக்காது

ரம்யா (கல்லூரி மாணவி, தேனி) :- ஒரே நேரத்தில் இதை செய்வது கடினமானது. கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு பல்வேறு நிலைகளில் அமல்படுத்தலாம். ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரும் போது அதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து கல்லூரியிலும் ஏற்படுத்த வேண்டும். தற்போது சில கல்லூரி மாணவிகளுடன் உரையாடும் போது அவர்களின் பாடத்திட்டத்தை விட, நான் படிக்கும் பாடத்திட்டம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளதை உணர்கிறேன். இதை இன்னும் நவீனப்படுத்தி இருக்க வேண்டும். தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் எது சிறப்பாக உள்ளதோ, அதை இன்னும் சிறப்பாக வடிவமைத்து அதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்திய பிறகு இதை அமல்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பிரபு (கல்லூரி மாணவர், உப்புக்கோட்டை) :- ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வருவது நல்ல விஷயம். கல்லூரிகள் அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளுக்கு நிகரான கட்டமைப்புகளை அரசு கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வந்தாலும், அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன் அளிக்கும். சில மென்பொருட்கள் விலை அதிகம் இருக்கும் என்பதால் அரசு கல்லூரிகளுக்கு இன்றும் அவை எட்டாக்கனியாகவே உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story