பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி பேட்டி
இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,
உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
மாணவர்களும் , பேராசிரியர்களும் கல்லூரி மாறும்போது ஒரே பாடத்திட்டம் பயனளிக்கும்.. காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். எனத் தெரிவித்துள்ளார்.