40 பல்லக்குகளில் சாமிகள் ஊர்வலம்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா முன்னிட்டு 40 பல்லக்குகளில் சாமிகள் ஊர்வலம் நடந்தது.
ஓசூர்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திரவுபதி அம்மன் பூ கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம், விடிய, விடிய நடைபெற்றது. இதையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பல்லக்குகளில் விநாயகர், சந்திரசூடேஸ்வரர், முருகன், நஞ்சுண்டேஸ்வர சாமி, பண்ட ஆஞ்சநேயர், வெங்கடாசலபதி, தர்மராஜ சாமி, ராமர், கிருஷ்ண சாமி, ஷீரடி பாபா, கோட்டை மாரியம்மன், எல்லம்மன், காளியம்மன், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களை வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தது. மேலும், பூ கரகம் ஆடியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது, பொதுமக்கள் கரகத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி நாதஸ்வர கச்சேரி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.