திருக்கோஷ்டியூர், அரியக்குடி கோவில்களில் சாமி திருவீதி உலா
திருக்கோஷ்டியூர் மற்றும் அரியக்குடி கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காரைக்குடி,
திருக்கோஷ்டியூர் மற்றும் அரியக்குடி கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா
கொரோனா தொற்று குறைந்ததால் 2 ஆண்டுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பல இடங்களில் உறியடி உற்சவமும் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் தங்க நாக வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். பின்னர் கொடி மரம் அருகில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதை தொடர்ந்து கண்ணன் பாடல்கள் பாடிய பக்தர்கள் பெருமாளை வணங்கினர். மேலும் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன..
பெருமாள் வீதி உலா
இதேபோல் காரைக்குடி அருகே பிரசித்தி பெற்ற அரியக்குடி திருவேங்கட முடையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பெருமாள் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் கோவிலை சுற்றி வீதி உலா வந்த பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து கோவில் முன்பு உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.