கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பணிகளுக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகின்றன.
2-ம் போக சாகுபடி
அதன்படி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் 2-ம் போக சாகுபடியாக சம்பா நடவு பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
கூத்தாநல்லூர், குடிதாங்கிச்சேரி, மரக்கடை, வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், பழையனூர், வேளுக்குடி, சித்தனங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு பிறகு, வயல்களில் டிராக்டர் மூலம் மறு உழவு செய்து சம்பா நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழையால் பாதிப்பு
முன்னதாக கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முதல்போக சாகுபடியாக விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து இருந்தனர். குறுவை பயிர் நல்ல விளைச்சல் கண்டு, பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தபோது பெய்த பலத்த மழையால், நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
மழையில் நனைந்த நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்தனர். இதில் கிடைத்த நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் உடைய நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். முதல்போக குறுவை சாகுபடியின்போது மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், 2-ம் போக சம்பா சாகுபடியிலாவது கூடுதல் மகசூல் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.