ஓசூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: வீடுகள் முன்பு தேங்கி கிடந்த மண் குவியலை அகற்றிய பெண்கள்
ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளி கிரேப்ஸ் கார்டன் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க வீடுகளையொட்டி குழி தோண்டப்பட்டது. ஆனால் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. வீடுகள் முன்பு தோண்டப்பட்ட குழியால் மண், கற்கள் தேங்கி கிடந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் தங்களது வாகனங்களை வீடுகள் அருகில் நிறுத்தமுடியவில்லை. இதனால் அவர்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், நேற்று தங்களது வீடுகள் முன்பு தேங்கி கிடந்த கற்கள், மண் குவியலை அகற்றினர். அவர்கள் மண்வெட்டி மற்றும் கைகளை பயன்படுத்தி அவற்றை அப்புறப்படுத்தினர். இந்த பணி சில மணி நேரம் நீடித்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.